புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாலையில் தவறவிட்ட 2 சவரன் தங்க நகையைக் கண்டெடுத்த அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், அதனை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து தனது நேர்மையை நிரூபித்துள்ளார். அந்த மாணவனின் உயரிய பண்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவர் தமிழரசன். இவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், சாலையில் 2 சவரன் தங்க நகை ஒன்று கீழே கிடப்பதைக் கண்டுள்ளார்.
கீழே கிடந்த நகையை எடுத்த தமிழரசன், உடனடியாக அதனை தனது பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார். மாணவனின் நேர்மையைப் பாராட்டிய ஆசிரியர்கள், அந்த நகையை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பள்ளி ஆசிரியர்களுடன் பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு சென்ற மாணவர் தமிழரசன், தான் கண்டெடுத்த 2 சவரன் தங்க நகையை போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். நகையைப் பெற்றுக்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் வீரமுத்து, மாணவனின் இந்த உன்னதமான செயலை மனதாரப் பாராட்டி சால்வை அணிவித்தார்.
இன்றைய காலகட்டத்திலும் சாலையில் கிடந்த விலையுயர்ந்த நகையை தனது பேராசைக்கு ஆளாகாமல், உரியவர்களிடம் சேர்க்க நினைத்த மாணவர் தமிழரசனின் நேர்மைப் பண்பு, அந்த பகுதி மக்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.