தமிழக செய்திகள்

அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது! - மு.க.ஸ்டாலின்

பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கைகட்டித்தான் நிற்பார் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். இது தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது!

5 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வரும் சாதனைத் திட்டங்களைப் புதுகை மக்கள்முன் பட்டியலிட்டு, பாசிச பா.ஜ.க.வின் கொடுங்கரங்களும் காவி நிழலும் தமிழ்நாட்டை அண்டவிடாமல் தடுக்க ஆதரவு கோரினேன்.

தேர்தல் நேரத்தில் கூட, தமிழ்நாட்டுக்கு எதிரான டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் ஆணவப் பேச்சுகளைத் தடுக்கவோ, அவர்களின் வாயைக் கட்டிப் போடவோ திறனற்ற பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கைகட்டித்தான் நிற்பார்.

தமிழ்நாடு அதை அனுமதிக்காது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.