தமிழக செய்திகள்

புனே இளம் தொழிலதிபர் கொலை வழக்கு; காதலனுடன் சேர்ந்து ‘பயிற்சி’ செய்த பெண் - பகீர் தகவல்கள்

தங்கள் மகனை கொல்வதற்கு பதில், சியா கோயல் திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே என கேத்தனின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

மும்பை,

சியா கோயல் தனது காதலன் சேத்தனுடன் முன்பே லோஹாகாட் கோட்டைக்கு சென்று, அங்குள்ள மலையில் இருந்து கேத்தன் விஷாலை எப்படி தள்ளிவிட வேண்டும் என்று பயிற்சி செய்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

புனே ககுஞ்சே பகுதியைச்சேர்ந்தவர் இளம் தொழில் அதிபர் கேதன் விஷால் அகர் வால்(வயது 26). இவரது குடும்பத்தினர் ரியல் எஸ்டேட் துறையில் தடம் பதித்து பெரும் பணம் படைத்தவர்களாக விளங்குகின்றனர்.

இவருக்கும், மசாலா மற்றும் முந்திரி வியாபாரம் செய்யும் குடும்பத்தை சேர்ந்த சியா கோயல்(20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், இளம் ஜோடியினர் பல இடங்களுக்கு சென்று வந்தனர்.

400 அடி பள்ளத்தாக்கில்..

இந்தநிலையில் சியா கோயல் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கேதன் விஷாலை புனே அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லோஹாகாட் கோட்டைக்கு கடந்த 18-ந்தேதி அழைத்திருந்தார். அன்று இருவரும் ஜோடியாக மலையேற்றம் சென்றனர்.

மலையில் உள்ள செங்குத்தான பாறையில் புகைப்படம் எடுத்தபோது, கேதன் விஷால் எதிர்பாராதவிதமாக 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டார் என சியா கோயல் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் அழுதுகொண்டே கூறினார். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று, சுமார் 3 மணிநேரம் போராடி கேதன் விஷாலை சடலமாக மீட்டனர். போலீசார் இதனை விபத்து எனக்கருதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பெண்ணின் கோர முகம்

ஆனால் கேதன் விஷாலின் குடும்பத்தினருக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி போலீசார் நடத்திய புலன் விசாரணையில் இளம்பெண் சியா கோயல் தனது காதலனுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி, தனக்கு திருமணம் நிச்சயித்த இளம் தொழில் அதிபரை மலையில் இருந்து தள்ளிக்கொன்றது வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம்பெண் சியா கோயலையும், அவரது காதலனான சேத்தன் சவுத்ரி(22) என்ற வாலிபரையும் கைது செய்து புனே மாவட்டம் மாவல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 29-ந்தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. விசாரணைக்குப்பிறகு அவர்கள் சிறையில் கம்பி எண்ண உள்ளனர்.

கொலைக்கு பயிற்சி

கைது செய்யப்பட்ட இளம்பெண் சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அவர்கள் இருவரையும் கொலை நடந்த லோஹாகாட் கோட்டை பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில், கொலையை அரங்கேற்றியது எப்படி? என்பதை போலீசார் முன்பு இருவரும் நடித்துக் காட்டினர்.

முன்னதாக இந்த கொலையை அரங்கேற்ற இருவரும் சேர்ந்து தீட்டிய திட்டங்கள் குறித்த பகீர் தகவல்கள் விசாரணையில் அம்பலமாகியுள்ளன. இளம் தொழிலதிபர் கேத்தன் விஷாலை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்த பின்னர், கொலை செய்வது எப்படி? என்பதற்கான வழிகளை இணையதளத்தில் இருவரும் தேடியுள்ளனர்.

அதன்படி, உயரமான இடத்தில் இருந்து தள்ளிவிட்டு கேத்தன் விஷாலை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மொபல் போனில் இருவரும் பேசிக் கொண்ட பழைய தரவுகள் அனைத்தையும் அழித்துள்ளனர். கொலையை செய்து முடித்த பிறகு அந்த இடத்தில் இருந்து எப்படி வெளியேற வேண்டும்? போலீசாரிடம் என்ன சொல்ல வேண்டும்? என அனைத்தையும் திட்டமிட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, சியா கோயல் தனது காதலன் சேத்தனுடன் முன்பே லோஹாகாட் கோட்டைக்கு சென்று, அங்குள்ள மலையில் இருந்து கேத்தன் விஷாலை எப்படி தள்ளிவிட வேண்டும் என்று பயிற்சி செய்துள்ளார். இந்த கொலை திட்டம் தோல்வி அடைந்துவிட்டால், வேறு வழிகளில் கொலையை அரங்கேற்றவும் அவர்கள் தயாராக இருந்துள்ளனர்.

தோல்வியடைந்த முதல் கொலை முயற்சி

இந்த திட்டத்தின்படி, கடந்த ஜூன் 14-ந்தேதி கேத்தன் விஷாலை லோஹாகாட் கோட்டைக்கு சியா கோயல் அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள மலையில் அவர்கள் இருவரும் ஏறியபோது, கேத்தன் விஷாலை அவர் கீழே தள்ளிவிட்டுள்ளார். ஆனால் கேத்தன் ஒரு செடியைப் பிடித்து கீழே விழாமல் தப்பிவிட்டார்.

பின்னர், ‘ஏன் என்னை தள்ளிவிட்டாய்?’ என்று கேத்தன் கேட்டபோது, ‘கீழே ஒரு பாம்பு ஓடியது. அதனால் உங்களை காப்பாற்ற நினைத்து, பயத்தில் தள்ளிவிட்டுவிட்டேன்’ என்று சியா கோயல் அழுது நாடமகாடியுள்ளார். இதனை கேத்தன் நம்பிவிட்டார். இதன் பின்னர், 18-ந்தேதி 2-வது முறையாக கேத்தன் விஷாலை மீண்டும் ஹோலாகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்ற சியா கோயல், இந்த முறை தனது காதலனுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றி முடித்துவிட்டார்.

பெற்றோர் வேதனை

இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேத்தன் விஷாலின் கொலைக்கு நீதி வேண்டும் எனக்கோரி அவரது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினர்.

‘தங்கள் மகனை கொல்வதற்கு பதில், சியா கோயல் இந்த திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே’ என கேத்தனின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கேத்தன் விஷாலின் தந்தை கூறுகையில், ‘கொலை நடந்த சமயத்தில் லோஹாகாட் கோட்டையில் இருந்தவர்கள் காவல்துறையிடம் சாட்சி சொல்ல முன்வர வேண்டும். சாட்சி சொல்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என நான் உறுதியளிக்கிறேன். எங்கள் மகனுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.