சென்னை,
சென்னை தரமணியில் 5-வது மாடியிலிருந்த தள்ளுவண்டி, கீழே குளித்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியின் மீது விழுந்ததில் அவர் பலியாகினார்.
சென்னை தரமணி பகுதியில் அடுக்குமாடி கட்டிட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று (சனிக்கிழமை) காலை, கட்டிடத்தின் 5-வது தளத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் 'வீல் பாரோ' எனப்படும் தள்ளுவண்டி நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தது.
அந்த சமயத்தில், கட்டிடத்தின் கீழே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பகுதியில் அஸ்ரபுல் ஆலம் (வயது 31) என்ற வடமாநில தொழிலாளி குளித்துக் கொண்டிருந்தார். 5-வது மாடியில் இருந்து அதிவேகமாக வந்த அந்த இரும்பு வண்டி, அஸ்ரபுல் ஆலம் மீது பலமாக விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தின் போது அஸ்ரபுல் ஆலம் அருகில் நின்று கொண்டிருந்த முகமது ஸ்ரேல் என்ற மற்றொரு தொழிலாளி மீதும் வண்டி மோதியதில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அஸ்ரபுல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுமான தளத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வலைகள் பொருத்தப்படாததே இந்த விபத்திற்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.