தமிழக செய்திகள்

சென்னை கோட்டை ரேடார் குறித்து எழுந்த கேள்வி! வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னையில் 2 ரேடார் கருவிகள் இருக்கின்றன.

சென்னை,

வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கி மழை பெய்து வரும் சூழலில், நேற்று சென்னை கோட்டை அருகில் இருக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. சென்னை ரேடார் கருவியில் பதிவாகும் தகவல்களை சேகரிக்க அந்த இணையதள பக்கத்தில் சென்று பார்த்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரேடார் கருவிகள்

பருவமழை காலத்தில் ரேடார் கருவிகள் செயல்படாமல் போவதும், அதுகுறித்து செய்திகள் வெளியாவதும், பின்னர் அதற்கு வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளிப்பதும் வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் தற்போது புயல் உருவாக உள்ள சூழலில், இப்படி ரேடார் கருவி செயல்படாமல் இருந்தால் எப்படி மழை அளவையோ, வானிலை நிகழ்வுகளையோ கணிக்க முடியும்? என்ற கேள்வி எழுந்தது.

போதிய தரவுகள்

இதற்கு வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்திருந்தது. அதில், 'தமிழகம், புதுச்சேரியில் மழை, புயல் நிலவரம் குறித்து துல்லியமாக கண்காணிக்க பல்வேறு இடங்களில் ரேடார் கருவிகள் உள்ளன. சென்னையில் 2 ரேடார் கருவிகள் இருக்கின்றன. அவற்றில் பள்ளிக்கரணையில் இருக்கும் 'எக்ஸ்' பேண்ட் ரக ரேடார் 200 கி.மீ. தொலைவிலான தரவுகளைத் துல்லியமாக தந்து கொண்டிருக்கிறது. கோட்டை அருகில் இருக்கும் 400 கி.மீ. தொலைவிலான தரவுகளை தரக்கூடிய 'எஸ்' பேண்ட் ரக ரேடார் கருவியில் தான் பிரச்சினை உள்ளது. பள்ளிக்கரணை ரேடார் கருவி செயல்பாட்டில் இருப்பதால், இதில் எந்த பிரச்சினையும் இல்லை. போதிய தரவுகள் கிடைக்கும்' என தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT