தமிழக செய்திகள்

சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் தகவல்

அம்பத்தூர் மண்டலத்தில் 21,844 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு 11.08.2026 முதல் 21.10.2026 வரை 1,50,303 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பு இல்லாத தமிழகத்தை உருவாக்கிட உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) 11.08.2026 அன்று தொடங்கப்பட்டது.

இந்த சிறப்பு முகாமின் மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் 12,313 தெருநாய்களுக்கும், மணலி மண்டலத்தில் 7,200 தெருநாய்களுக்கும், மாதவரம் மண்டலத்தில் 15,038 தெருநாய்களுக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12,477 தெருநாய்களுக்கும், இராயபுரம் மண்டலத்தில் 8,598 தெருநாய்களுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 13,849 அம்பத்தூர் மண்டலத்தில் 21,844 தெருநாய்களுக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 11,895 தெருநாய்களுக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 7,782 தெருநாய்களுக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 10,131 தெருநாய்களுக்கும், ஆலந்தூர் மண்டலத்தில் 4,343 தெருநாய்களுக்கும், பெருங்குடி மண்டலத்தில் 12,752 தெருநாய்களுக்கும், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது, வளசரவாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் இம்முகாம் நடைபெற்று வருகிறது. வளசரவாக்கம் மண்டலத்தில் 3943 தெருநாய்களுக்கும், அடையாறு மண்டலத்தில் 3,985 தெருநாய்களுக்கும், மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4,153 தெருநாய்களுக்கும், இதுவரை வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

“வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை”

இந்த முகாம்கள் மூலம் 11.08.2026 முதல் 21.10.2026 அன்று வரை பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1,50,303 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய்த் இல்லா சென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT