தமிழக செய்திகள்

8 நாட்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி - சென்னை மாநகராட்சி தகவல்

10 குழுக்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் ரேபிஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த 11-ந்தேதி தொடங்கிய வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாமின் மூலம் இதுவரையிலான 8 நாட்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பில் இருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) கடந்த 11.08.2026 அன்று திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் தொடங்கப்பட்டது.

இம்முகாமின் வாயிலாக இந்த 3 மண்டலங்களிலும் உள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அகபுற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து இதுவரை 8 நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 22,158 தெருநாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் முடிவுற்றவுடன், பிற மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 75 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் (Anti Rabies Vaccination and Endectoparasiticidal) செலுத்தப்படவுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.