நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தவறான பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்ததைத் தட்டிக்கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டைவிரலை, முன்னாள் போக்குவரத்துக் கழக ஊழியர் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, இன்று (திங்கட்கிழமை) வழக்கம்போல பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ரத்தினக்குமார் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது, பேட்டையைச் சேர்ந்த முன்னாள் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரான சீனிவாசன் என்பவர், எதிர்திசையில் தவறான பாதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார்.
இதனால் விபத்து ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, பேருந்து ஓட்டுநர் ரத்தினக்குமார் அதைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சீனிவாசன், பேருந்து ஓட்டுநர் ரத்தினக்குமாரின் கையைப் பிடித்து அவரது கட்டைவிரலை பலமாகக் கடித்துக் குதறியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஓட்டுநர் ரத்தினக்குமாரின் கட்டைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அரசுப் பணி நேரத்தில் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.