சென்னை,
தமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட பல ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டாமல் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள தொடர்வண்டித் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தரக் கோரி மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுடன் தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களை இணைப்பதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.
தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு வருவதற்கும், நடப்பு 2026&27ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்காக மட்டும் ரூ.7611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்காகவும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், நிதி ஒதுக்கீட்டில் ஏற்படும் முன்னேற்றம் தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்களை செயல்படுத்துவதில் எதிரொலிப்பதில்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. இந்த நிலையை மாற்றி தொடர்வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கண்ணுக்கு தெரியும் அளவுக்கும் முன்னேற்றம் காட்டப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும், எதிர்பார்ப்பும் ஆகும்.
தமிழ்நாட்டில் 01.04.2026-ம் நாள் நிலவரப்படி, 8 புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்கள், 8 இரட்டைப் பாதைத் திட்டங்கள், 3 அகலப் பாதைத் திட்டங்கள் என மொத்தம் 19 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.27,282 கோடி ஆகும். ஆனால், இந்த மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக ரூ.8811 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டிருப்பதும், இந்தத் தொகை, விலைவாசி உயர்வு காரணமாக நிலுவையில் உள்ள திட்டங்களின் மதிப்பீட்டில் ஏற்பட்ட உயர்வை ஈடு செய்வதற்குக் கூட போதுமான அளவில் இல்லை என்பதும் தான் தாமதத்திற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்களின் எண்ணிக்கை 8. இவற்றின் மொத்த தொலைவு 811 கி.மீ. ஆகும். இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.15,653 கோடி ஆகும். இவற்றில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அதனால், இந்தத் திட்டத்தின் மதிப்பு கணிசமான அளவில் அதிகரித்திருக்கக் கூடும். ஆனால், இந்தத் திட்டங்களுக்காக இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு ரூ.1514 கோடி மட்டுமே. இது 10 சதவீததிற்கும் குறைவு ஆகும். இதுவரை அமைத்து முடிக்கப்பட்டுள்ள புதிய பாதைகளின் தொலைவு 24 கி.மீ மட்டுமே. இது மொத்தத் தொலைவில் 2.95 சதவீததிற்கு மட்டுமே என்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டங்கள் தாமதமாவதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. அவற்றில் முதலாவது போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது. இரண்டாவது இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தித் தரப்படாதது ஆகும்.
தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வரும் போதிலும், அதில் பெரும் பகுதி தொடர்வண்டிப் பாதை திட்டங்களுக்காக செயல்படுத்தப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக கடந்த 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.6626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதில் புதிய பாதைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு ரூ.617.76 கோடி மட்டுமே.
இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதத்திற்கும் குறைவு ஆகும். அதிலும் கூட ரூ.192.54 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 8 புதிய பாதை திட்டங்கள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி திண்டிவனம் & நகரி ரூ.169.28 கோடி, மதுரை & தூத்துக்குடி ரூ.12.19 கோடி, தருமபுரி & மொரப்பூர் ரூ.10.72 கோடி என 3 திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்பட்டு செலவிடப்படவில்லை.
2026-27ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொடர்வண்டித் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.7611 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, அதில் புதிய பாதைத் திட்டங்களுக்கான பங்கு ரூ.497.57 கோடியாகக் குறைக்கப்பட்டு விட்டது. அந்த நிதியிலும் கூட திண்டிவனம் & நகரி புதிய பாதைக்கு ரூ.334.70 கோடி, திருப்பெரும்புதூர் & கூடுவாஞ்சேரி பாதைக்கு ரூ.100 கோடி என இரு திட்டங்களுக்கு மட்டும் 88 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்களுக்கு செலவிடும் அளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
இரண்டாவதாக, தமிழக தொடர்வண்டிப் பாதைத் திட்டங்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதில் செய்யப்படும் தாமதமும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தின் தொடர்வண்டித் திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக 4612 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், இதுவரை 1178 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தித் தரப்பட்டுள்ளன. இன்னும் 3434 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தித் தர வேண்டியிருப்பதும் திட்டங்களின் தாமதத்திற்கு காரணம்.
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள புதிய பாதை திட்டங்களில் மிகவும் முக்கியமானது திண்டிவனம் & திருவண்ணாமலை பாதைத் திட்டமாகும். இத்திட்டத்திற்கு தேவைப்படும் 276 ஹெக்டேர் நிலத்தில் இதுவரை வெறும் 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் கூட, நிலம் இல்லாததால் அதை பயன்படுத்த முடியவில்லை. அதேபோல், தருமபுரி நகரை சென்னை மாநகரத்துடன் இணைப்பதற்கான தருமபுரி & மொரப்பூர் புதிய பாதைத் திட்டத்திற்கு தேவையான 93 ஹெக்டேரில் 47 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டிருப்பதால், அந்தத் திட்டமும் முடங்கிக் கிடக்கிறது.
மதுரை & அருப்புக்கோட்டை & தூத்துக்குடி, சென்னை & மாமல்லபுரம் & கடலூர் கிழக்கு கடற்கரை தொடர்வண்டிப் பாதைத் திட்டம், அத்திப்பட்டு & புத்தூர், திருப்பெரும்புதூர் & கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புதிய பாதை திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் முக்கியமானவை. இவற்றில் பல திட்டங்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித் துறை இணையமைச்சர்களாக பணியாற்றிய போது உருவாக்கப்பட்டவை. சுமார் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்தத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை வேண்டும்.
748 கி.மீ நீளமுள்ள 3 அகலப்பாதைத் திட்டங்களுக்கு ரூ.3605 கோடி செலவிடப்பட்டு, 631 கி.மீ நீளப் பாதைகளின் பணிகள் முடிக்கப்பட்டிருப்பதும், 314 கி.மீ நீள இரட்டைப் பாதை பணிகளுக்கு ரூ.3693 கோடி செலவிடப்பட்டு 54 கி.மீ நீளப் பாதைக்கான பணிகள் முடிக்கப்பட்டிருப்பதும் ஓரளவு மன நிறைவு அளிக்கின்றன. எனினும், இந்தப் பணிகளும் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயித்து, அதை எட்டுவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றன. இந்த இலக்கை எட்டுவதில் தொடர்வண்டிப் பாதைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள புதிய தொடர்வண்டிப்பாதைத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அதற்காக, நிதி ஒதுக்கீடு செய்தல், நிலம் கையகப்படுத்தித் தருதல் ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் இரு அரசுகளின் அதிகாரிகள், வல்லுனர்கள் ஆகியோரை கொண்ட சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்; தொடர்வண்டிப் பாதைகளை அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மாதமும் அந்தக் குழு அறிக்கை அளிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.