தமிழக செய்திகள்

சென்னையின் குடிநீர் ஏரிகளில் மழை: நீர் இருப்பு நிலவரம் என்ன?

குடிநீர் தேவைக்காக பூண்டியிலிருந்து 286 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

சென்னை,

சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் வழங்கும். பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

மழை

அந்தவகையில் நேற்று முன்தினம் காலை 8 மணியிலிருந்து, நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் 10 மி.மீ. என்ற அளவில் மழை பதிவானது. அதேபோல் சோழவரம் 13, புழல் 5, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 13, செம்பரம்பாக்கம் 15 என்ற அளவில் மழை பதிவானது.

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் கால்வாய் மூலம் 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர, சோழவரம் 30, புழல் 240, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 36, செம்பரம்பாக்கம் 154 கன அடி தண்ணீர் வந்துள்ளது.

நீர் இருப்பு

குடிநீர் தேவைக்காக பூண்டியிலிருந்து 286 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல் சோழவரம் 8, புழல் 203, கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை 19. செம்பரம்பாக்கம் 205 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.

பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் மொத்த இருப்பு 5.56 டி.எம்.சி. ஆகும். இது 42.09 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7.84 டி.எம்.சி. கையிருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.