சென்னை,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், கோயம்பேடு, அண்ணாசலை, கீழ்பாக்கம், கிண்டி, மாம்பலம், உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதைபோல புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.