நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

மரணக் குழிகளாக மாறும் மழைநீர் வடிகால் பள்ளங்கள்! - நயினார் நாகேந்திரன்

அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியாகும் அவலத்திற்கு, இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

சென்னை,

மரணக் குழிகளாக மாறும் மழைநீர் வடிகால் பள்ளங்கள்.. தவெக அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இளைஞர் உயிரிழப்பு

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே எவ்விதப் பாதுகாப்புத் தடுப்புகளுமின்றித் திறந்த நிலையில் விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில், கட்டுமானக் கம்பிகள் தலையில் பாய்ந்து, ஹரிபிரசாத் என்ற 25 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன. தவெக அரசின் அலட்சியத்தால் அநியாயமாக உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியும் தொடரக் கூடாது

மழைக்காலம் நெருங்கும் வேளையில், ஆங்காங்கே மழைநீர் வடிகால் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. அதற்குள் மழை பெய்துவிட்டால், தோண்டிய பள்ளங்களை மூடாமலும், பாதுகாப்பு வேலிகள் அமைக்காமலும் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் ஏராளமான விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதை நாமே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், Reels எடுப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சரும் அவரது அமைச்சர்களும், சாமானிய மக்களின் உயிர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இனியும் இந்த நிலை தொடரக் கூடாது!

இழப்பீடு வழங்க வேண்டும்

மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அரசின் நிர்வாக அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியாகும் அவலத்திற்கு, இனியாவது முதல்-அமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT