சென்னை,
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் சந்தை வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தையின் முக்கிய நுழைவு வாயில்கள், நடைபாதைகள் மற்றும் கடைகளின் முன் மழைநீர் வடிய வழியின்றி குளம்போல் தேங்கியுள்ளது. சில இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் சேற்றின் காரணமாக சந்தைக்கு வரும் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் போதிய வர்த்தகம் இன்றி, அன்றாட வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்தைக்குள் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மின்மோட்டாரைப் பயன்படுத்த வேண்டும் என்றும், வடிகால்களைச் சீரமைக்க நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.