தமிழக செய்திகள்

தமிழக கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு

தமிழ்நாட்டுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர கவர்னர் நியமிக்கப்படவில்லை.

சென்னை,

தமிழ்நாட்டின் கவர்னராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் இன்று சென்னை லோக் பவனில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட் டார். அவருக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படவில்லை. மாறாக கேரள மாநில கவர்னர் ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார்.

இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர கவர்னர் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த ஆகஸ்டு மாதம் ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரி கிரண் ரெட்டி தமிழகத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக பேசப்பட்டது. அப்போது பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். அவர் வந்த பிறகு இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி தமிழ்நாட்டுக்கு கேரள கவர்னர் ஆர்.வி.அர்லேகரே புதிய கவர்னராக. அதாவது முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தமிழக கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை லோக்பவனில் பதவியேற்றுக்கொண்டார். கவர்னரின் செயலாளரான சஜ்ஜன்சிங் ஆர். சவான், ஐ.ஏ.எஸ்., லோக்பவன் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தமிழகத்தின் முழுநேர கவர்னராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT