சென்னை,
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார். நாங்கள் இரண்டு தினங்களுக்கு முன் தமிழ்நாட்டு மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால் பழனிசாமி மாநில அரசை கண்டித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார். அதில் கூட கேஸ் சிலிண்டர் மக்களுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்கின்ற கோரிக்கையை தனது தோழமைக் கட்சியான மத்திய அரசை நடத்தும் பாஜகவிடம் முன்வைக்க மறுத்துவிட்டார்.
அதிமுக ஆட்சியிலேயும் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தது. குட்காவுக்காக ஒரு அமைச்சர் மீதே எப்ஐஆர் போடப்பட்ட காலம் எல்லாம் அதிமுக ஆட்சியில் தான் நடந்தது. அதேபோல் நடிகர்களுக்குப் போதை பொருள் கொடுத்ததற்காக பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அதிமுக ஐடிவிங்கை சேர்ந்தவர். அதற்கு பிறகு அவர் நீக்கப்படுகிறார். இப்படி போதை பொருள் சப்ளை செய்கின்றவர்களையே தன்னுடைய கட்சியில் வைத்துக்கொண்டு, அதற்காக எப்ஐஆர் போடக்கூடிய குற்றவாளிகளை கூட தன்னுடைய கட்சியில் வைத்துக்கொண்டு இன்றைக்கு வந்து தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் என்கிறார்.
தமிழ்நாட்டில் எங்கேயும் போதை பொருள் உற்பத்தி கிடையாது. காண்ட்லா துறைமுகம் என்று குஜராத்தில் இருக்கிறது அதானியின் துறைமுகம். அங்கிருந்துதான் நிறைய போதை பொருள்கள் வெளியே வருகின்றன என்பது அகில இந்திய ரீதியிலேயான குற்றச்சாட்டு. அதனுடைய கடைமடைப் பகுதிதான் தமிழ்நாடு. எனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போதை பொருட்கள் பல அளவுகளில் சென்றிருக்கும். ஆனால் தமிழ்நாடு என்பது கடைமடை பகுதியாக இருப்பதால் நம்முடைய காவல் துறையும் பல செக்போஸ்ட்களை அமைத்து கடுமையாக தடுத்து நிறுத்தி இருக்கிறோம். அந்த தடையையும் மீறி ஒரு சில போதை பொருட்கள் தமிழ்நாட்டுக்குள் வந்திருக்கலாம். அதையும் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குகளை போட்டு கொண்டிருக்கின்றது காவல்துறை.
இந்த 75 நாட்களில் 246 கொலைகள் நடந்திருப்பதாகச் சொல்கிறார். அதிமுக ஆட்சியில் தான் அதிகம் என்பது தரவுகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த புள்ளி விவரங்களை மறுத்து பழனிசாமி சொல்லி இருந்தால் அது நியாயம். அதிமுக ஆட்சியில் எத்தனை படுகொலைகள் நடந்திருக்கின்றன என்பதையும் புள்ளி விவரத்தோடு ஒவ்வொரு ஆண்டுக்கும் சொல்லி இருக்கின்றோம். எனவே அதிமுக ஆட்சியை விட இன்றைக்கு சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள்.
பெண்கள் மீது திடீர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பாசம் வந்திருக்கிறது. காரணம், பல்வேறு சர்வேக்களில் 80% பெண்கள் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்கின்ற தகவல்கள் வருகின்றன. எனவே பெண்கள் ஓட்டுக்களை தடுக்க வேண்டும். மத்திய பாஜக அரசுக்கு எப்பவுமே இந்த 100 நாள் வேலை எல்லாம் பிடிக்காது. பெண்கள் சம்பாதிப்பது சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக சம்பாதிப்பது இதெல்லாம் அவருடைய எஜமான் பாஜகவுக்கு பிடிக்காது. எனவே இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் பெண்களை அச்சப்படுத்துகின்ற வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை போல ஒரு போலி நாடகத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது தகர்த்தெறியப்படுகிறது.
ஆனால் ஒரு சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கலாம். அதை எங்களுடைய காவல் துறை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றோம். இந்தியாவிலேயே விழிப்புணர்வோடு பணியாற்றுகின்ற காவல் துறை நம்முடைய தமிழ்நாடு காவல் துறை. அது எடப்பாடி பழனிசாமிக்கு மறந்து போய்விட்டது.
கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பிரசாரப் பயணத்தை தொடங்கினார். மூன்று நான்கு நாட்களில் பயணத்தை நிறுத்திட்டார். ஏனென்றால் அதிலும் தோல்வி. பிரசார பயணத்தில் தோல்வி கண்ட ஒரு அரசியல் தலைவர் இருக்கிறார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். இப்போது மீண்டும் தொடங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியையோ அவருடைய கொள்கையையோ மக்கள் நம்பத் தயாராக இல்லை. அதிமுகவின் அப்பாவி தொண்டர்கள் இப்படிப்பட்ட மோசமான தலைமை நமக்கு வந்துவிட்டது என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பலர் வெளியேறிவிட்டார்கள். இன்று அந்தக் கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
எனவே எப்பாடுபட்டாவது தன்னுடைய கட்சிப் பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரே இலக்கோடுதான் அவர் அதிமுகவை நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற ஆர்வம் எதுவும் அவருக்கு கிடையாது. நிறைய புதிய போட்டியாளர்கள் வந்திருப்பதால் அதிருப்தி அடைந்திருக்கிறார். எதிர்கட்சி தலைவர் பதவி நமக்கு இல்லாமல் செய்திவிடுவார்களோ என்கின்ற அச்சம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கிறது. எது எப்படியானாலும் வரப்போகிற தேர்தலில் எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னதை போல 200 தொகுதிகளுக்கு மேல் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. எங்களுடைய கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. மக்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கின்ற கூட்டணி.
எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். நிறைய வழக்குகள் வருவதாக சொல்கிறார். பெண்களுடைய ரகசியம் காப்பாற்றப்படுவதாலும் அவர்களுக்கு தைரியம் கொடுக்கப்பட்டிருப்பதாலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் புகார் கொடுக்க முன்வருகிறார்கள். கடந்த காலத்தில பழனிசாமி ஆட்சி காலத்தில் ரகசியம் காக்கப்படவில்லை. புகார் கொடுக்க வந்த பெண்ணின் மீதே வழக்கு போட்டு அதற்கு பிறகு போராடித்தான் அந்த வழக்கு மாற்றப்பட்டது.
வரியெல்லாம் உயர்த்திவிட்டதாக குற்றத்தாட்டைச் சொல்லி இருக்கிறார். மத்திய அரசின் 15வது நிதி ஆணயம் தனது அறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்து வரி தள விகிதங்களை (ஃப்ளோர் ரேட்ஸ்) அறிவிக்க செய்ய வேண்டும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது. எனவே வரி உயர்வுக்குக் காரணம் மத்திய அரசே தவிர நாங்கள் அல்ல. எனவே மத்திய அரசை எடப்பாடி பழனிசாமி கேட்கவேண்டும்.
ஒடிசா மாநிலம் அமைதியாக இருந்தது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு எத்தனை கலவரங்கள் எத்தனை கலாட்டாக்கள் என்று போய் பாருங்கள் தெரியும். இதுதான் பாஜகவின் உண்மை முகம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்குகிறது. இங்கே எந்தவிதமான அதிருப்திகளுக்கும் இடமில்லை. திராவிட மாடல் ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசை. இதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார். ஆதாரத்தோடும் புள்ளி விவரங்களோடும் சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறோம். அவருக்கு ஆதாரமும் கிடையாது புள்ளி விவரமும் கிடையாது.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்:
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வரும் 23-ஆம் தேதி வரை நேர்காணல்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன. அதற்குள்ளாக அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு முறையான அறிவிப்புகள் வெளியாகும்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களை திமுக மிரட்டுவதாகக் கூறப்படும் வதந்திகளில் உண்மையில்லை. ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார்; அவருக்குப் பின்னால் மிகப்பெரிய ரசிகர் மன்றமே இருக்கிறது. அவரை யாராலும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவர் அன்புக்கு மட்டுமே அடிபணிவார் என்பது எங்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். 1996-லேயே எங்களுக்காகக் குரல் கொடுத்தவர் அவர். திமுக-வின் நெருங்கிய நண்பரான அவரை மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சிபிஐ அழைத்துள்ளது. அவர்களுக்குத் தகுந்த விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஆற்றலும், தைரியமும் அவரிடம் உள்ளது. அவர் சட்டப்பூர்வமாகத் தனது விளக்கத்தைப் பதிவு செய்வார்.
தற்போது டாஸ்மாக்கில் ஊழல் நடப்பதாகக் கூறுவது ஆதாரமற்றது. 2021-க்கு முன்பிருந்த பழைய கணக்குகளை வைத்துக் கொண்டு தற்போது குறை கூறுகிறார்கள். எங்களது ஆட்சியில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை. 'திராவிட மாடல்' ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தருகிறார்கள். எங்களைப் பற்றிப் பரப்பப்படும் பொய்யான தகவல்கள், வரப்போகும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தோல்வியையே உறுதிப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.