சென்னை,
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின்பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த 6 எம்.பி. பதவிகளை நிரப்ப தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, வேட்பு மனு தாக்கல் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி, மார்ச் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச்-9 ஆம் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் மார்ச் மாதம்-16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20 ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
திமுக சார்பில், மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதே போல், அதிமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரான தம்பிதுரை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ், பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் இன்று தங்களது வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.