தமிழக செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த நபர்

மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின்பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த 6 எம்.பி. பதவிகளை நிரப்ப தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி, மார்ச் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச்-9 ஆம் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் மார்ச் மாதம்-16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20 ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் அவர், தற்போது 252-வது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இது போன்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.