தமிழக செய்திகள்

ரம்ஜான் பண்டிகை, வாரவிடுமுறை: தமிழகம் முழுவதும் 1,212 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 565 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

சென்னை,

அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறை தினம் என தொடர் விடுமுறையையொட்டி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை வியாழக் கிழமை 345 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு19-ந் தேதி ( நாளை ) வியாழக்கிழமை 90 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து 19-ந் தேதி 12 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் , ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 565 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.