சென்னை,
பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்
பா.ம.க.வில் உச்சக்கட்ட அதிகாரம் யாருக்கு என்பதில் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
பாமக தலைவராக என்னை அறிவிக்க வேண்டும்; கட்சியின் பெயர், கொடி, மாம்பழ சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என ராமதாஸ் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை செல்லாது என அறிவிக்கவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராமதாஸின் திருமண நாளன்று அவரது தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் நேரில் சென்றார். அங்கு தந்தை-மகன் இடையே நீண்ட நேரம் சுமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருவருக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கி, குடும்ப ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் சமரசம் ஏற்பட்டது.
தங்களுக்குள் ஏற்பட்ட சுமுக உடன்பாட்டை அடுத்து, வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்றும், மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டதால் வழக்கை வாபஸ் பெறுகிறேன்" என்ற ராமதாஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.