தமிழக செய்திகள்

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்வதில் மெத்தனம் - ராமதாஸ் குற்றச்சாட்டு

நியமன வழக்கை தமிழக அரசு எதிர்கொண்டு பணி வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

போக்குவரத்து சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம், பிரிவு அலுவலகம் என 150-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் பணிகளை கண்காணித்து மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் பெரும்பாலானவற்றை கணினி மயமாக்கிய போதும், அலுவலர்கள் பற்றாக்குறை என்பது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 10 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டது.

இப்பணிக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 2 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 785 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு 2018 ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. விதிகளின்படி, ஒருபதவிக்கு இரு விண்ணப்பதாரர்கள் என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல், 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இதனால் குறிப்பிட்ட நியமனத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக தடை நீடிக்கிறது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 24 முறை விசாரணைக்கு வந்தபோதும் தமிழக அரசு ஒருமுறைகூட நேரில் ஆஜராகாததால் வழக்கு முடிவடையாமல் உள்ளது. மேலும் இந்த வழக்கினுடைய அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்து அரசு தரப்பு வாதம் மட்டுமே மீதம் உள்ள நிலையில் வருகிற மார்ச் 24-ம் தேதி மீண்டும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலைமையில் 45 காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற்று முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்கிய பிறகே 2024-ம் ஆண்டு அறிவிக்கையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என தடை ஆணை பெறப்பட்டது.

தற்போது 2024-ம் ஆண்டு அறிவிக்கையின் படி – தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தடை ஆணையை உயர்நீதிமன்றத்தில் நீக்கி அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க அரசு முனைப்பு காட்டுகிறது. ஆனால் 2018-ம் ஆண்டு அறிவிக்கையின் படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான உச்சநீதிமன்ற வழக்கை முடிக்க தமிழக அரசு எந்தவித முனைப்பும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நேர்முகத் தேர்வு முடிக்கப்பெற்ற, 226 பேரில் 10-ற்கும் மேற்பட்டவர்கள் 8 ஆண்டு காலதாமதத்தால்,

வயது மூப்பு அடைந்து பணி வாய்ப்பை பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டனர். தேர்வு செய்யப்பட்டும் பணி வாய்ப்பை பெறாததால், அவர்களது குடும்பங்கள் கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கைக்கு பின் கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை ஒருவரைக்கூட பணி நியமனம் செய்யாத நிலையில் அண்மையில் 2024-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி தொழில் படிப்பை ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்பில் தேர்வு பெற்றவர்களுக்கு தேர்வு நடத்தி நேர்முக தேர்வு இல்லாமல் 53 பேருக்கு இந்த அரசு நியமனக் கடிதம் வழங்கியுள்ளது.

கடந்த ஆட்சியில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக பணி நியமனம் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தமிழக அரசு எதிர்கொண்டு அவர்களுக்கு பணி வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.