தமிழக செய்திகள்

ராமநாதபுரம்: காரின் மேற்கூரையில் அமர்ந்து வெற்றி கொண்டாட்டம்- த.வெ.க.வினர் 12 பேர் கைது

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் சில வாலிபர்கள், ஒரு சொகுசு காரின் இருபுறமும் நின்று கொண்டும், மேற்கூரையில் அமர்ந்து கொண்டும் ஆடிப்பாடியபடி கூச்சலிட்டு விசில் ஊதினர்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிற்பகலில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது ஒரு சொகுசு காரில் வாலிபர்கள் பலர் உள்ளே அமர்ந்து கொண்டும், சிலர் வாகனத்தின் இருபுறமும் நின்று கொண்டும், மேற்கூரையில் அமர்ந்து கொண்டும் ஆட்டம் போட்டபடி விசில் ஊதியபடி ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் இருந்து புறப்பட்டு வந்தனர்.

இவர்கள் வரும் வழியில் கத்தி கூச்சலிட்டபடியும், விசில் அடித்தபடியும் த.வெ.க. வெற்றியை கொண்டாடியபடி வந்தனர். மேலும் அந்த வழியாக சென்றவர்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த வாலிபர்கள் காரில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் கொட்டும் மழையில் சொகுசு காரில் ஆடிப்பாடியபடி கூச்சலிட்டு விசில் ஊதினர். மேலும் அந்த வழியாக வந்த அரசு ஊழியர்களையும், பெண்களையும் அச்சுறுத்தும்படி நடந்ததாக கூறப்படுகிறது. அவர்களை ரோந்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக த.வெ.க.வினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.