ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடலில் மூழ்கிய தனது மகனைக் காப்பாற் முயன்ற மீனவர் ஒருவர், அலைகளின் சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகினார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் சந்தனமாரி. இவருக்கு பரத் காளீஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் சந்தனமாரி தனது மகன்களுடன் நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பரத் படகிலிருந்து தவறி விழுந்து அலைகளின் சீற்றத்தில் சிக்கி கடலில் மூழ்கியுள்ளார்.
மகன் நீரில் மூழ்கி தத்தளிப்பதைக் கண்ட மீனவர் சந்தனமாரி, சிறிதும் யோசிக்காமல் உடனடியாக படகிலிருந்து கடலில் குதித்தார். அப்போது வந்த ராட்சத அலையில் சிக்கி சந்தனமாரி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பரத்தை பத்திரமாக மீட்டனர். எனினும் மீனவர் சந்தனமாரி கடலின் ராட்சத் அலையில் சிக்கி மாயமாகினார்.
இதையடுத்து சக மீனவர்கள் உடனடியாக கடலோரக் காவல் படைக்கும், உள்ளூர் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரப் பாதுகாப்புப் குழும போலீசாரும், உள்ளூர் மீனவர்களும் இணைந்து மாயமான மீனவர் சந்தனமாரியை விசைப்படகுகள் மூலம் கடலில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மீனவக் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.