ராமநாதபுரம்,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 79). இவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் 2 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் மனைவி மஞ்சுளா என்பவர் மேற்கண்ட கோதண்டபாணி தனது தந்தை என்றும், போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும் கோதண்டபாணியின் தந்தை சாத்தையா பண்டிதர், தாய் சண்முகவள்ளி, மனைவி சாந்தி ஆகியோரின் வாரிசுகள் என்று கூறி வாரிசு சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் மேற்கண்ட வாரிசுதாரர்கள் அனைவரும் இறந்துவிட்ட தாகவும், மகளாகிய மஞ்சுளா மட்டும் உயிரோடு இருப்பதாக போலி ஆவணம் தயார் செய்துள்ளார். இந்த ஆவணங்களை வைத்து மேற்கண்ட நிலத்தினை முதுகுளத்தூர் கொழுந்துறை வடக்கு பகுதியை சேர்ந்த பிறவி மகன் கோவிந்தராஜ் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தாக கூறப்படுகிறது.
இந்த பவர் பத்திரத்தை பெற்ற கோவிந்தராஜ் என்பவர் மூலம் மேற்கண்ட நிலத்தினை முகமது அசின் என்பவருக்கும். கீழக்கரை முத்துசாமிபுரத்தை சேர்ந்த பாக்கியராஜ் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த பசுபதீஸ்வரன் ஆகியோருக்கும் தலா 2 ஏக்கர் முறையே பவர் ஏஜெண்டு என்ற முறையில் கிரையம் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதவிர மேற்கண்ட பாக்கியராஜ் தான் பெற்ற நிலத்தினை ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு எழுதி கொடுத்தாக கூறப்படுகிறது.
மேற்கண்ட அனைவரும் போலி இறப்பு சான்றிதழ் மற் றும் வாரிசு சான்றிதழை தயார் செய்து சொத்தை அபகரிக்க முயன்றதாக கோதண்டபாணி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுளா, கோவிந்தராஜ், பாக்கியராஜ், பசுபதீஸ்வரன், ரமேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.