திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் உள்ளது. கந்தசஷ்டி மட்டுமல்லாமல் திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பொது தரிசனம், ரூ.100 கட் டண தரிசனம் என பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
சமீபகாலமாக கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விரைவாக தரிசனம் செய்ய வேண்டுமென்றால் சில அர்ச்சகர்கள் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுமதிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்களும் நீண்ட வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.
அப்போது முகக்கவசம் அணிந்திருந்த நபர் உள்பட 4 பேர் கோவில் சண்முக விலாச மண்டபம் பகுதியில் நின்று கொண்டிருந்த அர்ச்சகர் அய்யப்பனிடம் சென்று பேசினர்.
அவர்களில் ஒருவர் கூறுகையில், 'நாங்கள் 4 பேர் வெளியூரில் இருந்து வந்துள்ளோம். நாங்கள் விரைவாக கோவி லுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்ய வேண்டும்' என்றார்.
அப்போது அவர்களிடம், 'சிறப்பு தரினம் செய்வதற்கு ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 4 பேருக்கு ரூ.4 ஆயிரம் தரவேண்டும் என்று அர்ச்சகர் கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நபர், பின்னர் தன்னுடைய செல்போனில் 'ஜி-பே' மூலம் அர்ச்சகருக்கு பணம் அனுப்பினார். பின்னர் முகக்கவசம் அணிந்திருந்தவர் தவிர மற்ற 3 பேரும் சாமி தரிசனம் செய்ய அர்ச்சகருடன் சென்றனர். அங்கிருந்த கோவில் காவலாளிகள் கருப்பசாமி, தோப்பு ஆகியோர் அர்ச்சகர் கூறியதும் 3 பேரையும் கோவிலுக்குள் அனுமதித்தனர்.
தொடர்ந்து 4 பேரில் ஒருவராக முகக்கவசம் அணிந்து நின்று கொண்டிருந்த நபர் கோவில் அன்னதானக்கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு அவர் தனது முகக்கவசத்தை கழற்றியபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, முகக்கவசம் அணிந்துகொண்டு சாதாரண உடையில் ரகசியமாக வந்திருந்தவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் என்பதும், அவருடன் வந்தவர்கள் அவரது உதவியாளர்கள் எனவும் தெரியவந்தது. அமைச்சர் ரமேஷ் அன்னதானக்கூடத்தில் பக்தர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
தொடர்ந்து அமைச்சர், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடத்துக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் சங்கர், நாகராஜன் ஆகியோர் முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடம் பணம் கேட்டது தெரியவந்தது.
கோவிலுக்கு ரகசியமாக வந்தது அமைச்சர் ரமேஷ் என்பதை அறிந்ததும் அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர் மற்றும் காவலாளிகள், ஊழியர்கள் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போனார்கள். அவர்கள் 5 பேரிடமும் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய அர்ச்சகர் அய்யப்பன். கோவில் காவலாளிகள் கருப்பசாமி, தோப்பு, முடிக்காணிக்கை கூட ஊழியர்கள் சங்கர், நாகராஜன் ஆகியோர் முதற்கட்ட நடவடிக்கையாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கோவில் நிர்வாகம் அதிரடியாக பிறப்பித்தது.
அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் லஞ்சம் ஏதும் கொடுக்காமல் இறைவனை நேரிடையாக தரிசனம் செய்யலாம் என அங்கு வரும் பக்தர்கள் பூரிப்புடன் கூறியுள்ளனர். தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தும் விரைவாக சாமி தரிசனம் செய்து வருவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் செங்கோட்டையனை தவிர அனைவரும் புதுமுகங்கள் என்றே சொல்லலாம். அனைவரும் அதிகார அரசியலுக்கு பழக்கம் இல்லாதவர்கள். அத்தகையவர்களில் ஒருவர் தான் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் (வயது 31) சிறு வயதில் இருந்தே விஜய் ரசிகரான இவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சித்தலைமை வாய்ப்பு வழங்கியது. இவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரமேஷ் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
மிகவும் எளிமையான பின்னணியை சேர்ந்த அவர், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள எளிய வீட்டில் தான் வசிக்கிறார்.
அவரது தந்தை சீனிவாசன் (வயது 65) மறைமலை நகர் ஸ்ரீ சிவா விஷ்ணு கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம், ரூ.5 ஆயிரம் மட்டுமே. அவரது தாய் சுமதி (வயது 55) தான் பார்க்கும் சமையல் வேலைக்காக தினமும் 90 கிலோமீட்டர் பயணம் செய்து வருகிறார்.
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், 1995ல் சென்னை மறைமலை நகரில் குடியேறினார். அர்ச்சகராக வேலை பார்க்கும் கோவில் நிர்வாகம் வாடகையின்றி வழங்கிய வீட்டில் தான் இப்போதும் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ரமேஷின் மூத்த சகோதரர் சுதர்சன், 37, மெஷின் ஆபரேட்டராகவும், இளைய சகோதரர் அரவிந்த், 29, ஊழியராகவும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அமைச்சர் ரமேஷ்க்கு மனைவி மற்றும் 6 மாத குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.