தமிழக செய்திகள்

ராமேஸ்வரத்தில் பரபரப்பு: திருட முயன்று பக்தர்களிடம் சிக்கிய முதியவர் கடலில் குதித்து பலி

கடலில் குதித்த அவர் நீண்ட நேரமாகியும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அக்கினி தீர்த்தக்கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது கடற்கரையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அவர்கள் வைத்திருந்த பணப்பையை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

கடலில் குதித்த முதியவர்

இதனை கவனித்த பக்தர்கள் அவரை பிடித்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க முயன்றபோது, அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த முதியவர் திடீரென கடலில் குதித்தார். கடலில் குதித்த அவர் நீண்ட நேரமாகியும் கரைக்கு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் கடலோர போலீசார் மற்றும் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தீவிர விசாரணை

சிறிது நேர தேடுதலுக்குப் பிறகு, முதியவரின் உடல் கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தில் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் திருட்டு சம்பவங்களைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.