தமிழக செய்திகள்

ராமேஸ்வரம் விமான நிலையம்: இட அனுமதி கேட்டு தமிழக அரசு விண்ணப்பம்!

ஒரு விமான நிலையத்தை அமைப்பதற்கு இட அனுமதி மற்றும் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆகியவை முக்கியமானவையாகும்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கனேரியில், 600 ஏக்கர் பரப்பளவில் ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க இட அனுமதி கோரி, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி உள்ளிட்ட சுற்றுலா தலங்களைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். தற்போது இம்மாவட்டத்திற்கு சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து வசதிகள் மட்டுமே உள்ளன.

இதனால், பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனமான டிட்கோ, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாணிக்கனேரியில் 600 ஏக்கரில் அமைக்க திட்டம்

ராமேஸ்வரம் விமான நிலையம் அமைப்பதற்காக 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாணிக்கனேரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு 600 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான நிலம் எடுக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.

மத்திய அரசிடம் இட அனுமதி கோரல்

விமான நிலையத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், 'சைட் கிளியரன்ஸ்' எனப்படும் இட அனுமதி கோரி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் டிட்கோ நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது.

ஒரு விமான நிலையத்தை அமைப்பதற்கு இட அனுமதி மற்றும் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆகியவை முக்கியமானவையாகும். இந்த அனுமதிகள் கிடைத்த பிறகு, விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும் அதை இயக்குவதற்கான அனுமதியையும் பெற வேண்டும்.

SCROLL FOR NEXT