சென்னை,
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் இன்று (10.08.2026) சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் 2026-2027ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Allied & Health Care Courses) பட்டப் படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதன் பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“தேர்வுகுழு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் 2026-2027ம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் 29.06.2026 முதல் 23.07.2026 அன்று மாலை 5.00 மணி வரையிலும், பின்னர் 26.07.2026 காலை 10.00 மணி முதல் 27.07.2026 மாலை 3.00 மணி வரையும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதிநாளாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 72,633 ஆகும். இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கிறது. விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2026-2027ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 41,726. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 35,926. இதில் மாணவர்கள் 12,551, மாணவிகள் 23,375.
2026-2027ம் ஆண்டிற்கான 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4,860. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 3,625. இதில் மாணவர்கள் 981, மாணவிகள் 2644.
சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (Management Quota) இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 30,907. இதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் 26,956. இதில் மாணவர்கள் 9,105, மாணவிகள் 17,851.
இளநிலை மருத்துவத்திற்கான (MBBS) மொத்த இடங்கள் 7,157. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு (State Quota) 4473 இடங்கள். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2684.
சுயநிதி பல் மருத்துவக் மேலும் பல் மருத்துவத்திற்கான (BDS) மொத்த இடங்கள் 1383. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 213. கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் 1170.
7.5% ஒதுக்கீட்டிற்கான மொத்த மருத்துவ இடங்கள் (MBBS) 537. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 335. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 202.
7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த BDS இடங்கள் 104. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.
சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (Management Quota) இடங்களில் MBBS இடங்கள் 1966 மற்றும் பல் மருத்துவ (BDS) இடங்கள் 580 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் B.Sc Nursing, B.Pharm, இணை மருத்துவ படிப்புகள், Pharm.D (6-வருடம் மற்றும் 3-வருடம்), DGNM மற்றும் DIPLOMA IN PHARMACY படிப்புகளுக்கு 21.06.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேற்குறிப்பிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 21.06.2026 முதல் 12.07.2026 வரை பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS-ல் கூடுதலாக 150 மாணவர்கள் சேர்க்கும் வாய்ப்பு 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு 2026-2027 இந்த ஆண்டு கிடைத்துள்ளது. திருப்பூர், திருவள்ளுர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 கூடுதல் இடங்கள் வீதம் கிடைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 700 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள MBBS இடங்கள் 9,999. BDS பல் மருத்துவத்திற்கான இடங்கள் 2,000 ஆகும்.
மேலும், விண்ணப்ப நிகழ்வில் கால நேரம் மற்றும் விண்ணப்பங்களை திருத்திக்கொள்ள கால அவகாசம் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் கலந்தாய்வை (Counselling) பொறுத்தவரையில் ஒன்றிய அரசுடன் ஒத்திசைந்து (Synchronized) நடத்த இருப்பதனால், எந்தவொரு அட்டவணை மாற்றமோ, கால நீட்டிப்போ அளிக்க இயலாது. எனவே, மாணவர்கள் தமிழ்நாட்டு மாநில தேர்வுக்குழு இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி, கலந்தாய்வில் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.