தமிழக செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: தர்மபுரி மாணவி முதலிடம்

53 பேர் 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

சென்னை,

பொறியியல் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று வெளியிட்டார். TNEAONLINE.ORG என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:-

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்ப பதிவு செய்து பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை -2,45,235. இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1,30,767; மாணவிகளின் எண்ணிக்கை 1,05,245; மூன்றாம் பாலினத்தவர் 5, மொத்த எண்ணிக்கை 2,36,017.

இந்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 50,494 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் பள்ளிகல்வி துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 46,604 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 7,981 மாணவர்ர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களின் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 3,210 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,176 மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 500 மாணவர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 53. அதில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் 39 மற்றும் மற்ற தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 14. மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் 6 நாட்களுக்குள் (06.07.2026-க்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தினை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தரவரிசை பட்டியலில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அக்சிதா முதலிடம் பிடித்துள்ளார். திருப்பூரை சேர்ந்த ரோஹித் பாலன் இரண்டாம் இடம், நாமக்கல்லை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பொறியியல் கலந்தாய்வு:-

ஜூலை 13-ஆம் தேதி 7.5% ஒதுக்கீடு பிரிவினருக்கு பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும்

7.5% இடஒதுக்கீடு, விளையாட்டு ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 13, 14-ஆம் தேதிகளில் கலந்தாய்வு

TNEA 2026 DETAILED COUNSELLING SCHEDULE 30.6.2026.pdf
Preview