தமிழக செய்திகள்

கடல் சீற்றத்தால் உடைந்து கரை ஒதுங்கும் அரியவகை பவளப்பாறைகள்!

பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பவளப்பாறைகள் உடைந்து சேதமாகி கரை ஒதுங்குவது தொடர்ந்து நடந்து வருகிறது.

பனைக்குளம்,

பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் சீற்றத்தால் அரியவகை பவளப்பாறைகள் உடைந்து கரை ஒதுங்கி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இயற்கையாகவே கடலுக்கு அடியில் பல அரியவகை பவளப்பாறைகள் உள்ளன. சுனாமி போன்ற இயற்கை பேரலைகளை கட்டுப்படுத்துவதில் இந்த பவளப்பாறைகள் முக்கிய பங்குவகிப்பதுடன், மீன்களின் வாழிடமாகவும், இனப்பெருக்கத்திற்கு முக்கிய இடமாகவும் விளங்குகிறது. வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது.

கரை ஒதுங்கும் பவளப்பாறைகள்

கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் காரணமாக பல அரியவகை பவளப்பாறைகள் சேதமடைந்து உடைந்து உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை முதல் பிரப்பன்வலசை வரையிலான கடற் கரை பகுதிகளில் ஆங்காங்கே கரை ஒதுங்கி கிடக்கிறது. மலை வடிவ பவளப்பாறை, குச்சி வடிவ பவளப்பாறை, மூளை வடிவ பவளப்பாறை என பல இனங்களை சேர்ந்த பவளப்பாறைகள் உடைந்து கரைஒதுங்கி கிடக்கின்றன. பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பவளப்பாறைகள் உடைந்து சேதமாகி கரை ஒதுங்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மீன்கள் இனப் பெருக்கத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வனத்துறையினர் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பவளப்பாறைகள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு செயற்கை பவளப்பாறை கற்களையும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் பல்வேறு இடங்களில் மிதக்கவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT