நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நாமகிரி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகன் ரித்விக் நேற்று வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது பக்கத்தில் இருந்த கிணற்றின் மேல் ஏறி விளையாடிக்கொண்டு இருந்தான். யாரும் எதிர்பாராத நிலையில், கிணற்றின் மேல் மூடப்பட்டிருந்த இரும்பு தகடு சரிந்ததால், ரித்விக் 80 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். மூடப்பட்ட கிணறாக இருந்தாலும், சிறுவர்கள் ஏறி விளையாட முடியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.