ரேஷன் பொருட்கள் 
தமிழக செய்திகள்

இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: நவம்பர் 4, 5-ல் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு விநியோகம்

1346 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இல்லம் தேடி பொருட்கள் விநியோகம்

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

நவம்பர் மாதம் 4 மற்றும் 5 தேதி

இந்நிலையில், நவம்பர் மாதத்தின் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT