தூத்துக்குடி,
தூத்துக்குடி ராஜகோபால்நகரைச் சேர்ந்த பெரியாண் மகன் பாலகிருஷ்ணன் (வயது 51). இவர் சாத்தான்குளம் தாலுகா, புதுக்குளம் பகுதியில் உள்ள அரசு நியாயவிலைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக எடையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை என்பதால், வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இன்று காலையில் மீண்டும் கடையைத் திறப்பதற்காகப் பாலகிருஷ்ணன் வந்துள்ளார். அப்போது, கடையின் முன்பக்கக் கதவின் பூட்டு லேசான முறையில் உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று கடையில் வைக்கப்பட்டிருந்த இருப்புப் பொருட்களை அவர் ஆய்வு செய்தார்.
அதில் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுள்ள 1 மூட்டை சீனி, 50 கிலோ எடையுள்ள 1 மூட்டை துவரம் பருப்பு, 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 பாக்ஸ் பாமாயில் ஆகிய பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட பூட்டு மற்றும் கடை வளாகத்தைப் பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.