பஸ்சில் ஸ்பைடர் மேன் போல தொங்கிய வாலிபர்  
தமிழக செய்திகள்

தேனியில் அரசு பஸ்சின் பின்னால் நிஜ ‘ஸ்பைடர் மேன்’- வீடியோ வைரல்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் பின்னால் தொங்கி சென்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

தேனி,

தேனி மாவட்டத்தில் அரசு பஸ்சின் பின்னால் உள்ள ஏணியில் ஸ்பைடர் மேன் போல தொங்கிய வாலிபரின் வீடியோ வைரல் ஆனது.

ஆபத்தான பயணம்

தேனியில் இருந்து பூதிப்புரம் நோக்கி அரசு நகர பஸ் ஒன்று கோடாக்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியில், வாலிபர் ஒருவர் எந்தவித பயமும் இன்றி, ' ஸ்பைடர் மேன்' திரைப்பட பாணியில் கைகளையும் கால்களையும் நீட்டியபடி ஆபத்தான முறையில் பஸ்சில் ஒட்டியபடி தொங்கிக்கொண்டே பயணித்தார். நிஜ ஸ்பைடர் மேன் போல மக்களுக்கு காட்சி அளித்தது.

பயணிகள் அதிர்ச்சி

சுமார் 500 மீட்டருக்கும் மேல் நீடித்த இந்த ஆபத்தான பயணத்தை, பின்னால் வந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் பின்னால் தொங்கிச் சென்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட அந்த நபரை போலீசார் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.