சென்னை,
நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என 2 ஆக பிரிந்தது. இது அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு என்பதை ஏற்படுத்தியது.சட்டசபையில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும் கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதேபோல எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இரு தரப்பு மனுக்களும் ஆய்வில் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்து வந்தார்.
இதனால் அந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை ஏற்படபோகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையே, சிவி சண்முகம் தரப்பை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதேபோஅல், எம்.எல்.ஏ.க்கள் ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர் ஆகிய 5 பேர் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இது சிவி சண்முகம் தரப்புக்கு பின்னடவை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு தரப்பும் மீண்டும் சமாதானமாக செல்ல முடிவு செய்தனர்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி - சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி அணி இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.