சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரபரப்பாக இருந்து வருகிறது. அதிலும் தேர்தலில் 47 இடங்களை வென்ற அ.தி.மு.க.வில் பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் என 2 ஆக பிரிந்தது.
சட்டசபையில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும் கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதேபோல எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இரு தரப்பு மனுக்களும் ஆய்வில் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்து வந்தார். இதனால் அந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை ஏற்படபோகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கிடையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கடிதத்தையும் வழங்கினர்.
மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறியதும், 4 பேர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 25 எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இந்த மாற்றத்தால் அ.தி.மு.க.வில் இரு பிரிவு அணியால் உச்சகட்ட பரபரப்பானது.
அடுத்து என்ன செய்வது? என்பது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தரப்பி னர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டில் நேற்று காலை முதல் ஆலோசனை நடத்தினர். இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தங்கமணி உள்ளிட்டவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக்கு பின் நேற்று திடீர் திருப்பமாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்தவர்களின் கார்கள் அணிவகுத்தது. எடப்பாடி பழனிசாமியை நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, புவனகிரி அருண் மொழி தேவன், பழனி ரவிமனோகரன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசினர். கட்சி இரு பிரிவாக செயல்படுகிற நிலையில், கட்சியின் நலன் கருதி இரு தரப்பினரையும் ஒன்றிணைக்க இந்த பேச்சுவார்த்தையை எஸ்.பி. வேலு மணி தரப்பினர் மேற்கொண்டனர். இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் சி.வி.சண்முகம் இல்லத்தில் இருந்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இன்று புறப்பட்டனர். பறித்த கட்சி பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் இருவர் மட்டும் வரவில்லை. இரு அணிகளும் இணைந்த பிறகு, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவையில் அளித்த கோரிக்கை திரும்பப் பெறப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.