தமிழக செய்திகள்

சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

எனினும், சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னைக்கு இன்று விடப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது.

ரெட் அலர்ட்

இந்த நிலையில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று சென்னையில் 6 இடங்களில் அதிகனமழை பெய்த நிலையில் இன்று ரெட் அலர்ட் விடப்பட்டது.

எச்சரிக்கை

இந்த சூழலில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) பொதுமக்களுக்கு எஸ்.ஓ.எஸ். (SOS) மூலம் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து, செல்போன்களில் எச்சரிக்கைக்கான அலறல் சத்தமும் கேட்டது.

அதில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் முன்பே வேண்டிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ளவும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மீட்புக்குழுக்கள்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து, தேசிய பேரிடர் மீட்புப்படையின் 3 மீட்புக்குழுக்கள் சென்னைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதன்படி, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எப்.) சென்னைக்கு விரைந்துள்ளது. ஒவ்வொரு மீட்புக்குழுவிலும் தலா 30 வீரர்கள் என மொத்தம் 90 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வாபஸ்

இந்த நிலையில், சென்னைக்கு இன்று விடப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.

சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரத்தில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிழக்கு திசையில் நகர்ந்தது. இதனால், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. எனினும், சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT