தமிழக செய்திகள்

திருப்பத்தூரில் திருடுபோன ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் அரக்கோணத்தில் மீட்பு: குடோன் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

இந்த செம்மரக்கட்டைகள் கடந்த 18-ந் தேதி திருடு போனது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் திருடுபோன ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் அரக்கோணத்தில் மீட்கப்பட்டுள்ளது. குடோன் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு

திருப்பத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒன்று உள்ளது. செம்மர வழக்குகளில் பிடிபடும் செம்மரக்கட்டைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், பல்வேறு செம்மர வழக்குகளில் பிடிபட்ட 55 செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டு இருந்தன. 1,750 கிலோ எடை கொண்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

வன அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்டு

இந்த செம்மரக்கட்டைகள் கடந்த 18-ந் தேதி திருடு போனது. இதுகுறித்து, திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், வனக்காப்பாளர்கள் ஆர்.மோகன்குமார், பி.ராமமூர்த்தி, சி.ரேணு, வனவர் பி.பரமகுரு ஆகியோரை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம்.மகேந்திரன் சஸ்பெண்ட் செய்தார்.

2 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் அனில் வாகரே உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, செம்மரக்கட்டைகளை திருடிய கும்பலை தேடிவந்தனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குடோன் ஒன்றில் இன்று செம்மரக்கட்டைகள் பிடிபட்டன.

அதனைத் தொடர்ந்து, குடோன் உரிமையாளரான நாகலம்மாள் நகரை சேர்ந்த சத்யராஜ் மற்றும் செம்மரக் கடத்தல் கும்பல் தலைவன் திருத்தணியை சேர்ந்த பூவரசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆந்திராவை சேர்ந்த சிட்டி, அஜித் ஆகியோரை தேடி வருகின்றனர்.