தமிழக செய்திகள்

கல்விக்கான ஒதுக்கீடு குறைப்பு; அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? - அன்புமணி

கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக குறைக்கப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கல்விக்கான ஒதுக்கீடு குறைப்பு அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

நிதி ஒதுக்கீடு குறைப்பு

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறதா, உயர்த்தப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தக் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கல்வித்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட தவுலத் சிங் கோத்தாரி தலைமையில் 1964-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆணையம், 1966-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% என்ற அளவை எட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு சுமார் 3% என்ற அளவிலும், தமிழ்நாட்டில் அதை விட சற்றுக் கூடுதலாகவும் இருந்தது.

கோத்தாரி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கல்விக்கான அரசின் செலவுகள் குறித்த இலக்கு இன்று வரை எட்டப்படவில்லை. மாறாக, கல்விக்கான அரசின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன. கல்வியில் சிறந்த மாநிலம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.

ஒதுக்கீடு படிப்படியாக குறைப்பு

புத்தாயிரமாண்டின் தொடக்கமான 2000-01 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.

அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2010-11ஆம் ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் இரு பங்காக குறைக்கப்பட்டு விட்டது. 2010ஆம் ஆண்டில் கல்வித்துறை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றுக்கு முறையே ரூ.10,148 கோடி, ரூ.1751 கோடி என மொத்தம் ரூ.11,899 கோடி ஒதுக்கப்பட்டது. இது அந்த ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.4,50,474 கோடியில் 2.64% ஆகும்.

மேலும் 10 ஆண்டுகள் கழித்து 2020-21ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.34,181.73 கோடி, உயர்கல்விக்கு ரூ.5052.84 கோடி என மொத்தம் ரூ.39,233 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ரூ.17,88,074 கோடியாக தமிழகத்தின் பொருளாதாரம் அப்போது வளர்ச்சியடைந்திருந்த நிலையில், அதில் கல்விக்கு 2.19% மட்டுமே ஒதுக்கப்பட்டது.

3.92% நிதி ஒதுக்கப்பட்டிருந்தால்..

புத்தாயிரமாண்டின் கால் நூற்றாண்டு முடிவடைந்து விட்ட நிலையில், 2026-27ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்விக்கு ரூ.8393 கோடி என மொத்தம் ரூ.52,920 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார உற்பத்தி ரூ.40,67,312 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பள்ளிக்கல்விக்கு 1.09%, உயர்கல்விக்கு 0.21% என மொத்தம் 1.30% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இந்த ஒதுக்கீடு மிக மிகக் குறைவு ஆகும்.

2000-ஆம் ஆண்டில் 3.92% ஆக இருந்த கல்விக்கான ஒதுக்கீடு இப்போது 1.30% ஆக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 3.92% அளவுக்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தால், கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1,59,439 கோடி நிதி கிடைத்திருக்கும். ஆனால், இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அதை விட ரூ.1,06,519 கோடி குறைவு ஆகும். பரிந்துரை வழங்கிய கோத்தாரியோ, ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோ இப்போது இருந்திருந்தால், இந்த நிலையைக் கண்டு வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள். இந்த அவல நிலைக்கு தமிழ்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த, ஆட்சி செய்யும் அனைத்துக் கட்சிகளும் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

ஓர் அரசோ, ஒரு சமூகமோ அதன் முதல் கடமை குழந்தைகளுக்கு தரமான, இலவசக் கல்வியை வழங்குவது தான். அதற்காகத் தான் காமராசர் காலத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். அதற்கேற்ற வகையில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் அரசு பள்ளிகள் அறிவுத் திருக்கோவில்களாக திகழ்ந்தன.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவு

ஆனால், காலப்போக்கில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டதன் வாயிலாக, அரசாங்க பள்ளிகளில் ஆசிரியர்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2015-16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது, 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது.

கல்வித்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கும், அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை இந்த புள்ளி விவரங்களின் மூலம் அறிய முடியும். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்; பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அதனால் கல்வித்தரம் உயரும்; அதன் காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஆனால், கல்விக்கான நிதி குறைக்கப்படுவதால் தான் அரசு பள்ளிகள் மிக வேகமாக சீரழிந்து வருகின்றன.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவா?

இதே காலகட்டத்தில் பார்த்தால், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 62.03 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியில் தான் தனியார் பள்ளிகள் வளருகின்றன. தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவே அரசு பள்ளிகளின் வீழ்ச்சி உருவாக்கப்படுகிறதோ, அதற்காகத் தான் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்படுகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

அரசு பள்ளிகள் தான் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கான கருவிகள். அவற்றை வீழ விடாமல், வளர்த்தெடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் குறைந்தது வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக கலவித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 3% என்ற அளவுக்காவது அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.