சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மத்திய அரசால் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 125 நாள் வேலை உத்தரவாத திட்டத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவு ரூ.3,923 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது பெரும் அநீதியாகும். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான இந்த முடிவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது.
கிராமப்புறங்களில் பொது கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்; ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ள மத்திய அரசு, 125 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு வெறும் ரூ.3,923 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் வரைவுத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
125 நாள் வேலைத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு வெறும் 4.09% மட்டும் தான். கடந்த காலங்களில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 10%க்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது அதை 4.09% ஆக குறைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழகத்திற்கு 2023&24-ஆம் ஆண்டில் ரூ.12,136.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024&25ஆம் ஆண்டில் ரூ.7587.58 கோடியும், கடந்த ஆண்டில் ரூ.7702.89 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. இதுவே தமிழகத்தின் தேவைக்கு போதவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கடந்த ஆண்டில் தொடக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 16 நாள்களும், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்ட பிறகு சராசரியாக மேலும் 7 நாள்களும் வேலை வழங்கப்பட்டன. ஆனால், நடப்பாண்டில் அதை விட குறைவாக இப்போது ரூ.3,923 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எத்தனை நாள் வேலை வழங்கப்படும் என்பது தெரியவில்லை.
ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் முறையில் செய்யப்பட்ட மாற்றம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு மனித நாள்கள் வேலை தேவையோ, அதற்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், இப்போது 125 நாள் வேலை திட்டத்தின் கீழ், மத்திய அரசின் மறைமுக வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க பின்பற்றப்படும் 16-ஆம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் கடைபிடிக்கப்படுவது தான் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதற்கு காரணம். இந்த அநீதியான முறையை ஏற்க முடியாது.
மத்திய அரசின் மொத்த வரி வருமானத்தில் சுமார் 10% தமிழ்நாட்டிலிருந்து தான் செல்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 9.4% பங்களிப்பை தமிழ்நாடு தான் வழங்குகிறது. ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் 41% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் போது, அதில் வெறும் 4.07% மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது. மக்கள்தொகை அதிகமுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கும், பிற தென் மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுகிறது. மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, வளர்ச்சியை ஊக்குவித்ததற்காக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்கக் கூடாது; தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் குறைந்தது 50 விழுக்காட்டை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நிதிப்பகிர்வில் செய்யப்படும் அதே அநீதியை 125 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கும் நீட்டிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. இந்த முறையை மத்திய அரசு மாற்ற வேண்டும்.
125 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை கொண்டு இத்திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள மக்களுக்கு ஆண்டுக்கு 12 நாள்கள் கூட வேலை வழங்க முடியாது. ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதாகக் கூறிக் கொண்டு அதில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான நாள்கள் மட்டுமே வேலை வழங்கும் வகையில் நிதி ஒதுக்குவது நியாயமாக இருக்காது. மாநில உரிமைகளுக்கு எதிராக இந்த நிதி ஒதுக்கீட்டு முறையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இதற்கு பதிலாக தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யும் பழைய முறையையே தொடர வேண்டும் என்றும், திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் குறைந்தது 10 விழுக்காட்டை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்; வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.