சென்னை,
சென்னை கப்பல் துறைமுகத்தில் ரூ.7.72 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த செம்மரக்கட்டைகள் கடத்தல் கும்பல் மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகளைக் கடத்த முயற்சிப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையில் சென்னை துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்படவிருந்த ஏற்றுமதி கொள்கலன்களை சோதனை செய்தனர்.
காகிதச்சுருள்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கொள்கலனில் விரிவான சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறிய அளவிலான காகிதச்சுருள்கள், ஜல்லிக்கற்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.7.72 கோடி மதிப்பிலான 12.87 டன் உயர்தர செம்மரக் கட்டைகளை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்றுமதியாளருக்கு வழங்கப்பட்ட சுய-முத்திரையிடும் வசதியைத் தவறாகப் பயன்படுத்தி, கொள்கலனை தனியார் கிடங்கிற்குக் கொண்டு சென்று காகிதச்சுருள்களுக்குப் பதிலாக செம்மரக்கட்டைகளை மாற்றி அனுப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
அந்த கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் அசல் சரக்குகள், எடை எந்திரம், செம்மரத்துகள்கள் மீட்கப்பட்டன. இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.