தமிழக செய்திகள்

11 பள்ளிகளில் பிரமாண்ட பேனர்களாக வைக்கப்பட்ட ‘தினத்தந்தி' கட்டுரை - ஆர்வமுடன் படித்த மாணவர்கள்

தினத்தந்தி பத்திரிகையில் கடந்த 18-ந்தேதி ரீலா, ரியலா? என்ற தலைப்பில் முழுப்பக்க கட்டுரை வெளியானது.

சென்னை,

சமூக வலைதள விழிப்புணர்வு குறித்து தினத்தந்தியில் வெளியான ரீலா, ரியலா? என்ற கட்டுரை, சென்னையில் உள்ள 11 தனியார் பள்ளிகளில் பிரமாண்ட பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் படித்துச் சென்றனர்.

20 அடி உயரத்தில்...

தினத்தந்தி பத்திரிகையில் கடந்த 18-ந்தேதி சமூக வலைதளங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், செய்தித்தாள்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ரீலா, ரியலா? என்ற தலைப்பில் முழுப்பக்க கட்டுரை வெளியானது. இந்த கட்டுரை பல்வேறு தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த கட்டுரையால் ஈர்க்கப்பட்ட சென்னை கொளத்தூரில் செயல்படும் எவர்வின் மெட்ரிக்குலேசன் என்ற தனியார் பள்ளி, தனது பள்ளி வளாகத்தில் நேற்று 20 அடி உயரத்தில் தினத்தந்தியில் வெளியான ரீலா, ரியலா? கட்டுரையை மாணவர்களின் பார்வைக்கு பிரமாண்டமாக காட்சிப்படுத்தியது.

விழிப்புணர்வு பேனர்கள்

மேலும் சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் செய்தித்தாள்களின் உண்மைத்தன்மை குறித்து 25-க்கும் மேற்பட்ட சிறிய ரக விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களை 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு படித்துச் சென்றனர். இது அவர்களுக்கு வாசிப்பை நேசிக்க வைப்பதாக இருந்தது.

மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு

இதுதொடர்பாக எவர்வின் குழும நிறுவனர் டாக்டர் புருஷோத்தமன் கூறியதாவது:-

தினத்தந்தியில் வெளியான ரீலா, ரியலா? என்ற கட்டுரை இன்றைய தலைமுறை இளைஞர்களை சிந்திக்க வைக்கும் வகையில் சிறப்பாக இருந்தது. இந்த தகவல்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னையில் எவர்வின் குழுமத்திற்கு சொந்தமான 11 பள்ளிகளிலும் ரீலா, ரியலா? கட்டுரையை 20 அடி பேனர்களாக மாற்றி மாணவர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன். இந்த கட்டுரையை சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வினாடி-வினா போட்டி

ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் தினத்தந்தி பத்திரிகையில் வெளியாகும் கட்டுரைகள் மற்றும் தலையங்கங்கள், பொது அறிவு சார்ந்த செய்திகளை மாதத்திற்கு ஒருமுறை மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியாக வைக்கிறோம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் ரீல்ஸ் மோகத்தில் இருந்து வெளியேறி வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்வார்கள். இந்த வினாடி-வினா போட்டியை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். எங்கள் பள்ளியின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கை மூலம் மாணவர்கள் சமூக வலைதளங்களை கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் கையாள்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT