தமிழக செய்திகள்

ரீல்ஸ் மோகம்: நாட்டு வெடிகுண்டு வெடிக்க முயன்ற வாலிபர் கைது

நெல்லை மாநகர பகுதியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்வது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் சென்றனர்.

நெல்லை,

நெல்லை மாநகரில் ரீல்ஸ் மோகத்தில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்ய முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு, பைக்கை பறிமுதல் செய்தனர்.

நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்வது தொடர்பான ரீல்ஸ்

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்வது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்த ஐயப்பன் (வயது 22) என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் சென்றனர்.

நாட்டு வெடிகுண்டு வெடிக்க முயன்ற வாலிபர் கைது

அப்போது வண்ணார்பேட்டை பின்புறம் உள்ள நெல் வயல் பகுதியில், மற்றொரு நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்யத் தயாராக இருந்த மற்றோரு வாலிபர் அஸ்வின்(23) என்பவரைப் பிடித்தனர். அவரிடமிருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு ஒன்று மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அஸ்வின் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ஐயப்பனைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை அறிவுறுத்தல்

சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT