தமிழக செய்திகள்

ரீல்ஸ் மோகம்: பள்ளி வகுப்பறையில் இடையூறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பள்ளி வகுப்பறையில் ரீல்ஸ் எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் உத்தரமேரூர் அருகே தளவராம்பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி வகுப்பறைக்கு சென்ற தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தவெகவினர், அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் விஜய்யின் புகைப்படத்தை காட்டி "இவர் யார்" என கேட்டனர்.அப்போது மாணவர்கள் விஜய் என சொன்னதும், அங்கிருந்த சிலர் "விஜய் அண்ணா" என சொல்லுமாறு கூறினார்.

இதையடுத்து வகுப்பறையில் விஜய்யின் படத்தை எங்கு மாட்டுவது என ஆலோசனை நடத்தினர். பின்னர் விஜய்யின் புகைப்படத்தை வகுப்பறையில் மாட்டி ரீல்ஸ் எடுத்தனர். இந்த ரீல்ஸ் வைரலான நிலையில் அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தவெக நிர்வாகி ராஜேஷ், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களை செய்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தென்னரசு அறிவித்துள்ளார். கட்சி நிர்வாகியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த அதிரடி நடவடிக்கையை தவெக எடுத்து இருப்பதாக தெரிகிறது.