சென்னை,
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 23-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், எடப்பாடி தொகுதி நீங்கலாக 233 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் களம் கண்டது. நான்கு முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், த.வெ.க-வின் வரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் இன்று சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு விஜய் அழைத்திருந்தார். இன்று மதியம் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் களம், வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பேசிய விஜய், ஒரு முக்கியமான வாக்குறுதியை அளித்தார். ’தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மக்களைத் தொடர்ந்து சந்திப்பேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.