தமிழக செய்திகள்

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இந்த முறையை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் அதன் இரண்டாம் வடிவமான இ நாம் 2.0 திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

சென்னை,

இ நாம் 2.0 திட்டத்திற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தமிழகத்தில் 19 நாட்களாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முடங்கியுள்ளன. இதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உழவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ நாம் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கொள்முதல் செய்ய வராததால் முடங்கிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் உழவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வணிகர்களின் ஒத்துழைப்பின்மையால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் 19 நாள்களாக முடங்கியுள்ள நிலையில், இந்தச் சிக்கலுக்கு தீர்வு காணப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் வேளாண் விற்பனைத் துறையில், 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள், அதன் கட்டுப்பாட்டில், 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருட்களை மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து, அவர்களுக்கு அதிக விலை பெற்றுத் தருவது தான், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் பணியாகும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், உழவர்களின் விளைபொருள்களுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்யவும் வசதியாக மத்திய அரசின் சார்பில் இ நாம் ((The National Agriculture Market - eNAM) ) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் அதன் இரண்டாம் வடிவமான இ நாம் 2.0 திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதை ஏற்க முடியாது என்றும், ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்றும் கூறி, கடந்த அக்டோபர் 17-ம் தேதி முதல் வணிகர்கள் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

போராட்டம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளைபொருள்களை வாங்குவதற்கு ஆள் இல்லாததால், அவை முடங்கிக் கிடக்கின்றன. 19-ம் நாளாக முடக்க நிலை நீடிப்பதால், அதற்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் கோரிக்கை ஆகும். உண்மையில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இ நாம் 2.0 திட்டம் உழவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இப்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையில், உழவர்களிடம் இருந்து ஏலம் மூலம் வாங்கப்படும் பொருள்களுக்கான விலையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வங்கிக் கணக்கில் வணிகர்கள் செலுத்துவார்கள். அந்தத் தொகையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உழவர்களுக்கு வழங்கும். இ நாம் 2.0 திட்டத்தின்படி, வணிகர்கள் நேரடியாக மட்டுமின்றி, இணையவழியிலும் வேளாண் விளைபொருள்களை பார்வையிட்டு, ஏலத்தில் எடுக்க முடியும். அவ்வாறு ஏலத்தில் எடுக்கப்படும் விளைபொருள்களுக்கான தொகையை அதே நாளில் உழவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியமல்ல என்று கூறி, அதை ஏற்க வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இப்போதுள்ள நடைமுறைப்படி, கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருள்களுக்கான தொகை உழவர்களுக்கு கிடைக்க அவற்றின் மதிப்பைப் பொருத்து ஒரு நாளில் இருந்து 10 நாள்கள் வரை ஆகும். மதிப்பு குறைவாக இருந்தால், அந்தத் தொகையை உடனடியாக வழங்கிவிடும் வணிகர்கள், மதிப்பு அதிகமாக இருந்தால் 10 நாள்கள் வரை தாமதப்படுத்தி தான் வழங்குவார்கள். ஆனால், புதிய முறையில் கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் விளைபொருள்களுக்கான விலை அதே நாளில் வழங்கப்படும்; அதுமட்டுமின்றி, இணையதளம் வாயிலாகவும் ஏலம் எடுக்க முடியும் என்பதால் விளைபொருள்களுக்கு அதிக விலையும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் கொள்முதல் செய்யப்படும் பொருள்களுக்கான விலையை உடனடியாக வழங்குவதற்கு வணிகர்கள் தயங்குகின்றனர். அதனால் தான் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால், அதை வெளிப்படையாகக் கூறாமல், இ நாம் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இல்லை; வணிகர்கள் மற்றும் உழவர்களில் பெரும்பாலானோர் மின்னணுக் கருவிகளை செயல்படுத்தும் திறன் பெற்றவர்கள் அல்ல என்று கூறி திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் இச்சிக்கலுக்கு தீர்வு காணலாம்.

ஆனால், இந்த விவகாரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வரும் மாவட்டங்களின் நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது தான் சிக்கல் தீவிரமடைந்ததற்கு காரணமாகும். உழவர்களுக்கும், வணிகர்களுக்கும் மின்னணு கருவிகளைக் கையாளத் தெரியாது என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டும் உழவர்களுக்கு பயனளிக்கும் இ நாம் 2.0 திட்டத்தை செயல்படுத்தாமல் முடக்கி வைக்க முடியாது.

தமிழக அரசு

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, மாவட்ட நிர்வாகங்கள் மூலம் வணிகர்களையும், உழவர்களையும் அழைத்துப் பேச வேண்டும். தேவைப்பட்டால் இ நாம் 2.0 செயல்முறையைக் கையாள்வது குறித்து இரு தரப்பினருக்கும் பயிற்சி அளித்து அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT