சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் எதிர்வரும் 23.04.2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்.
1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.
மேலும், வேட்புமனுக்களானது மேற்கண்ட நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பெறப்படும். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வேட்பாளர்கள் வேட்பு மனுவினை இணையவழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்திடலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத்தாக்கலின் போது நேரில் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேற்குறிப்பிட்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாட்களில் நேரில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கீழ்க்கண்ட அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும்.
| வ. எண் | தொகுதி | தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முகவரி |
|---|---|---|
| 1 | எண்.11 டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் | திருமதி பி. பூங்கொடி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், எண்.266 டி.எச். சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-81 |
| 2 | எண்.12 பெரம்பூர் | திருமதி எஸ். கீதா டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, எண். 45, எருக்கஞ்சேரி ஹைரோடு, வியாசர்பாடி, சென்னை – 39 |
| 3 | எண்.13 கொளத்தூர் | திருமதி எஸ். சாந்தி ஒருங்கிணைந்த பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம், எண். 239, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம், சென்னை 11. |
| 4 | எண்.14 வில்லிவாக்கம் | திருமதி எல். மைதிலி சமுதாயக் கூடம், சிட்கோ நகர், 4வது பிரதான சாலை, வில்லிவாக்கம், சென்னை-49 |
| 5 | எண்.15 திரு.வி.க. நகர் (தனி) | திரு. எஸ். பால் பிரின்சி ராஜ்குமார் திரு.வி.க நகர் மண்டல அலுவலகம், எண்.158 ஸ்ட்ரஹான்ஸ் சாலை, பட்டாளம், சென்னை – 12 |
| 6 | எண்.16 எழும்பூர் (தனி) | திரு. என். சுரேஷ் எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகம், 88, மேயர் ராமநாதன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை - 31. |
| 7 | எண்.17 இராயபுரம் | திரு. ஆர். பன்னீர்செல்வம் இராயபுரம் மண்டல அலுவலகம், எண்.105, பேசின் பிரிட்ஜ் சாலை, இராயபுரம், சென்னை-79 |
| 8 | எண்.18 துறைமுகம் | திருமதி டி. பரிதா பானு பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாயக் கூடம், அறை எண்.60, வ.உ.சி. சாலை, சென்னை - 79. |
| 9 | எண்.19 சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி | திருமதி ஆர். சுகந்தி பல்நோக்கு மைய கட்டடம், 116-வது வார்டு அலுவலகம், எண்.43, புதிய எண் 22, டாக்டர். பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை -5 |
| 10 | எண்.20 ஆயிரம் விளக்கு | திருமதி ஐ. வளர்மதி தேனாம்பேட்டை மண்டல அலுவலகம், எண்:4, 4 ஆவது குறுக்குத் தெரு, ஏரிப் பகுதி, நுங்கம்பாக்கம். சென்னை – 34 |
| 11 | எண்.21 அண்ணா நகர் | திரு. பி. எம். செந்தில் குமார் அண்ணாநகர் மண்டல அலுவலகம், எண்.368, 2வது குறுக்குத் தெரு, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர், சென்னை – 30 |
| 12 | எண்.22 விருகம்பாக்கம் | திரு. என். சத்திய நாராயணன் 128 வார்டு அலுவலகம், எண். 77, காமராஜர் சாலை, விருகம்பாக்கம், சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில், சென்னை - 92. |
| 13 | எண்.23 சைதாப்பேட்டை | திரு. எஸ். வெங்கடேஷ் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், (தெற்கு) 69/40 அண்ணாசாலை லிட்டில் மவுண்ட், கிண்டி சென்னை-32 |
| 14 | எண்.24 தியாகராயநகர் | திரு. ஜி. சரவண மூர்த்தி கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், எண். 64, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. |
| 15 | எண்.25 மயிலாப்பூர் | திருமதி பி. எஸ். விஜயலட்சுமி மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவகம், எண்: 28, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை-28 |
| 16 | எண்.26 வேளச்சேரி | திருமதி லட்சுமி பிரியா தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம், அடையாறு மண்டல அலுவலகம், எண். 115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, எல் பி சாலை, அடையாறு, சென்னை – 20 |