நெல்லை ,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று நெல்லை- திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில்கள், மறுமார்க்கமாக திருச்செந்தூரிலிருந்து வரும் ரெயில்கள், கன்னியாகுமரி - திருநெல்வேலி ரெயில்கள் உள்பட மொத்தம் 29 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
இது தவிர, 26 ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி - கன்னியாகுமரி, ஜாம் நகர் - திருநெல்வேலி, கோவை-நாகர்கோவில் போன்ற பல ரெயில்கள் விருதுநகர், திண்டுக்கல், மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்பட்டது. அங்கிருந்தே மீண்டும் மறு மார்க்கமாகத் திருப்பி சென்றன.
நேற்று திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய வழக்கமான நேரத்திற்குப் பதிலாக, 1 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இதேபோல ஒருசில எக்ஸ்பிரஸ் ரெயில்களும் காலதாமதமாக புறப்பட்டன.