கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

ஈரநிலச் சூழலமைப்புகளுடன் தொடர்புடைய மொத்தம் 393 பறவை இனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025 - 2026 அறிக்கையை தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு வனத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள பறவைகளின் பன்முகத்தன்மையைக் கண்காணித்து, பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், 2023-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வனத்துறை 2025 டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பையும், 2026 பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பையும், வனத்துறை அதிகாரிகள், பறவை நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பறவை பார்வையாளர்களின் தீவிர பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு, தமிழ்நாட்டின் அனைத்து 38 மாவட்டங்களிலும் உள்ள 1,005 ஈரநிலங்களை உள்ளடக்கியது. இதில் ஏரிகள், பாசனக் குளங்கள், சதுப்பு நிலங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற முக்கிய நீர்நிலைகள் அடங்கும். இந்த ஆய்வின்போது, ஈரநிலச் சூழலமைப்புகளுடன் தொடர்புடைய மொத்தம் 393 பறவை இனங்கள் பதிவுசெய்யப்பட்டன. நேரடி எண்ணிக்கையில் 6,01,348 பறவைகள் கணக்கிடப்பட்டன. இவற்றில் 116 இனங்கள் நீர்ப்பறவைகளாகவும், 131 இனங்கள் வலசைப் பறவைகளாகவும் இருந்தன; அவற்றின் மொத்த எண்ணிக்கை 1,59,557 ஆகும். இது மத்திய ஆசிய பறவைப் பறப்புப் பாதையில் (Central Asian Flyway) தமிழ்நாட்டின் ஈரநிலங்கள் முக்கிய வாழிடங்களாக விளங்குவதை எடுத்துக்காட்டுகிறது. பொதுவாக பதிவான இனங்களில் லிட்டில் கார்மரண்ட், குளோஸ்ஸி ஐபிஸ், லிட்டில் எக்ரெட், ஈஸ்டர்ன் கேட்டில் எக்ரெட், இந்தியன் பாண்ட் ஹெரான், நார்தர்ன் பின்டெயில், லிட்டில் ஸ்டின்ட், கிரேட்டர் ஃபிளாமிங்கோ மற்றும் கார்கனே ஆகியவை அடங்கும். மேலும், IUCN சிவப்பு பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட பிரிவுகளில் உள்ள 35 பறவை இனங்களின் இருப்பும் இந்த கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு, தமிழ்நாட்டின் அனைத்து 38 மாவட்டங்களிலும் உள்ள காடுகள் மற்றும் நிலவாழ் சூழலமைப்புகளை உள்ளடக்கிய 1,108 நிலவாழ் பறவை கணக்கெடுப்பு இடங்களில் நடத்தப்பட்டது. மொத்தம் 391 பறவை இனங்கள் பதிவுசெய்யப்பட்டு நேரடி எண்ணிக்கையில் 2,24,801 பறவைகள் கணக்கிடப்பட்டன. இவற்றில் 228 இனங்கள் உள்ளூர் பறவைகளாகவும், 72 இனங்கள் வலசைப் பறவைகளாகவும் இருந்தன. IUCN சிவப்பு பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட பிரிவுகளில் உள்ள 36 பறவை இனங்களின் இருப்பும் இந்த கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்டு தமிழ்நாட்டின் காடுகள் மற்றும் நிலவாழ் வாழிடங்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இக்கணக்கெடுப்பில் பதிவான முக்கிய பறவைகள் இனங்களில் நாப்-பில்ட்டக், காட்டன் பிக்மி-கூஸ், கார்கனே, நார்தர்ன் ஷோவலர், யூரேஷியன் விஜியன், நார்தர்ன் பின்டெயில், ரெட் ஸ்பர்ஃபவுல், பெயிண்டெட் புஷ்-கொய்ல், நீலகிரி மர புறா, ஓரியண்டல் டர்டில்-டவ், ஏஷியன் மரகதபுறா, கிரீன் இம்பீரியல்- புறா, மலபார் இம்பீரியல்-புறா மற்றும் இலங்கை ஃப்ராக்மவுத் ஆகியவை அடங்கும்.

ஈரநிலச் சூழலமைப்புகள், காடுகள், கடலோர வாழிடங்கள், கழிமுகங்கள், மாங்குரோவ் காடுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாசனக் குளங்கள் ஆகியவற்றின் இருப்பினால் தமிழ்நாடு வளமான பறவைகள் பன்முகத்தன்மையைக் ஆதரிக்கிறது. இவை பறவைகளுக்கு உணவளிப்பு, இனப்பெருக்கம் மற்றும் ஓய்வு எடுக்கும் முக்கிய வாழிடங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், முக்கிய வாழிடங்களின் அறிவியல் அடிப்படையிலான மேலாண்மையின் மூலம் மாநிலத்தின் பறவைகள் பன்முகத்தன்மையைக் நீண்டகாலமாக கண்காணித்து, பாதுகாப்பு இலக்குகளை அடைவதை வலியுறுத்தும் வகையில் இந்த கணக்கெடுப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.