சாஸ்தாகோவில் நீர்த்தேக்கம் 
தமிழக செய்திகள்

சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு - முதல்-அமைச்சர் உத்தரவு

சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 23-ந்தேதி (23.11.2026) முதல் 29-ந்தேதி வரை 7 நாட்களுக்கு விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டத்தில் உள்ள சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

விவசாயிகளின் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விட கோரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்று, முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க நீர்த்தேக்கத்திலிருந்து மொத்தம் 48 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

7 நாட்கள் திறப்பு

அதன்படி, வரும் 23-ந்தேதி (23.11.2026) முதல் 29-ந்தேதி வரை 7 நாட்களுக்கு விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும். அதனை தொடர்ந்து, 30-ந்தேதி முதல் 09.01.2027 வரை 41 நாட்களுக்கு நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து பாசனத்திற்கு நீர் வழங்கப்படும்.

3,130.68 ஏக்கர் விளைநிலங்கள்

இந்த நீர் திறப்பின் மூலம் ராஜபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம், சேத்தூர், முத்துசாமிபுரம், நல்லமங்கலம், செட்டியார்பட்டி மற்றும் கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 3,130.68 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT