சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
"மூடப்பட்டதாக" அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை பல நாட்களாக பூட்டி வைத்து நாடகமாடிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசு, ஒரு வழியாக நமது பாஜக கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், மூன்று பக்கம் கொண்ட ஒரு பட்டியலை இன்று கடமைக்கே என்று வெளியிட்டு இருக்கிறது.
முகவரியுடன் மூடப்பட்ட கடைகளின் விவரங்களையும், அக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கியுள்ள மாற்றுப் பணி விவரத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனும் நமது வலியுறுத்தலுக்கு நேர்மாறாக, எண்களை வாரி இறைத்து, ஒரு பட்டியலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு யாருக்கு என்ன பலன்?
இந்த "எண்"துடைப்பு பட்டியலை இன்றே தூக்கி எறிந்துவிட்டு, உடனடியாக தெளிவான முகவரியுடன் கூடிய ஒரு பட்டியலை வெளியிட வேண்டும்! மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள எஞ்சியிருக்கும் டாஸ்மாக் கடைகளின் பட்டியலையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அவற்றை மூடுவதற்கான திட்டத்தையும் முதல்-அமைச்சர் விஜய் அறிவிக்க வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.